Friday, July 20, 2007

அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் பதிவில்

அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்
http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_18.html

செல்வநாயகி, இன்றுதான் படித்தேன். நல்ல இடுகை. பலருக்கு பயனுள்ள, சிலருக்கு பயனற்ற இடுகை. படித்தவுடன் தோன்றியது

இரண்டு.1. முன்பு சோகமித்திரனின் கதையொன்றை ஒருவர் விமர்சனம் செய்திருந்தார். கதை அடுத்தநாள் திவசத்துக்கு தன்னுடைய துவைத்துப்போட்ட வேட்டி காய்ந்துவிடுமா என்று மழை நாளில் கவலைப்படும் ஒருவரின் கவலை பற்றியது. அதுவும் கவலைதான். ஆனால் இங்கு ஆற்ற இயலா சோகங்கள் அடுத்தடுத்து வந்து ஆளை மூடும் போது தன்னுடைய வேட்டி காயாத சோகங்களை சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கும். ஆனால் தமிழ் சூழலில் சோகங்கள், சுகங்கள், வெற்றிகள், துக்கங்கள் எல்லாவற்றையும் கொண்டாட ஒரு தகுதியும், ஒரு பிறப்பும் இருக்கவேண்டும். (பாரதியே சிறையில் இருக்க நேர்ந்த வலி தனக்கு தன்னுடைய ஆரோக்கியக்குறைவினாலும், பிறப்பினாலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்று மனு போடும் போது, இத்தகைய மனுக்கள் அதிசயமானவை அல்ல போலும்)

2. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா என்ற பழமொழி. எருதின் காயத்தை நோண்டித் தின்று பசியாறும் வேளைகளில் காக்கைக்கு வேண்டியதெல்லாம் அநாகரீகமாக தொந்தரவு செய்யும் எருதின் வாலை யாராவது பிடித்துக்கொள்ள மாட்டார்களா என்ற எரிச்சலும், சாப்பாட்டுக்கு உலைவைக்குதே சனியன் என்ற கவலையும், இன்னும் கொஞ்சநேரம் இழுத்துப் பறிச்சுக்கொண்டு கிடந்தால் இன்னும் கொஞ்சம் சாப்பாடு என்ற ஆதங்கமும் தான்.சில காக்கைகளுக்கு இதுபோன்ற எருதுதானே அன்றொருநாள் நம்மை அதன் முதுகில் உட்காரப்போனது கொம்பைச் சிலுப்பி விரட்டி விட்டது என்ற கோபமும் இருக்கலாம்.

பதிவுக்கு நன்றி!
(இதை பிரசுரிப்பதில் பிரச்சனை இருந்தால் இதை தனிப்பட்ட குறிப்பாகக் கருதிக்கொள்ளலாம்)

Monday, July 16, 2007

தமிழ்தேசியம் குறித்த சசியின் பதிவில்

தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம்
http://blog.tamilsasi.com/2007/07/tamil-nationalism-in-tamil-nadu.html

சசி:
பதிவின் பலவிதயங்களோடு ஒத்துப்போனாலும் குறிப்பிடவிரும்பியவைகள் சில.

1. பதிவின் தலைப்பு. இது தமிழ் தேசியம் குறித்த ஒன்றைப்பார்வையை மட்டும் குறிப்பிடுவதாக அமைந்துவிட்டது. ஒரு வறட்டு தேசிய வாதமாக ஒருசில நிலைகளில் இருந்தாலும், தமிழ் தேசியவாதம் பல தளங்களைக் கொண்டது. தலைப்பு இதைக் குறிப்பதாக இல்லை. (அதே போன்று முன்பு குறிப்பிட விரும்பியது, அப்துல் கலாம் பற்றிய பதிவில், அ.க இந்திய தேசியவாதத்தின் முகமூடி என்பதற்குப் பதிலாக இந்துத்துவ தேசியவாதத்தின் முகமூடி என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நினைத்தேன்)

2. மொழிவழி தேசியங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் என்றுமே உள்ளுறைந்து கிடப்பவை. இதற்கு மாற்றான அல்லது மறுதலிப்பான (ஒரே இந்தியக்) கலாச்சார தேசியத்தினை கூர்மையாக மறுத்தும், முரண்பட்டும், எதிர்த்தும், அரிதாகச் சில சமயங்களில் உடன்பட்டும் அவைகள் செயல்பட்டு வந்தன; வருகின்றன.

2. தமிழ்தேசியம் மட்டுமல்ல மற்ற எல்லா மொழிவழித் தேசியங்களும் செழிப்பாகவும், வளமாகவும் இருக்கும்வரையில் தான் இந்திய ஒன்றியம் பன்முகத் தன்மை கொண்டதாகவும், உண்மையான மக்களாட்ட்சியாகவும் இருக்கும். இதற்கு எதிரான போக்குகள் வலுக்கும் போது பத்ரி குறிப்பிட்டது போல மொழிவழி தேசியங்கள் தங்களை உறுதிப்படுத்திகொள்ளவேண்டிய, கட்டமைக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தும் உள்ளது.

3. இன்றைய நிலையில் இந்திய ஒன்றியத்தில் தனிதமிழ்நாடு என்ற அரசியல் அமைப்பும் வேண்டுமானால் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்தேசியம் என்பதான அரசியல், கூட்டமைப்பில் அவசியமானதாகவே இருக்கிறது. நதிநீர் பங்களிப்பு, வனச்செல்வங்களைப் பாதுகாத்தல், மக்களில் மொழியில் உச்சபட்ச சிவில் உரிமைகளை வழங்க துணைநின்றல், தமது தேசிய வரலாற்றை கட்டமைப்பு செய்தல், அதைப் பாதுகாத்தல், தமது புவியியல் பரப்பை தக்கவைத்துக்கொள்ளுதல், தமது மக்களுக்குத் தேவையான நியாயமான பங்கீட்டை அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளங்களில் கோரிப்பெறுதல் போன்றவைகள் திறமையாக நடைபெற்று அதிகாரமும், பலனும் கூட்டமைப்பில் சரியாகப் பகிரப்பட மொழிவழி தேசியங்கள் வலுவாக இருத்தல் அவசியம்.

4. இதையெல்லாம் விட மொழிவழி தேசியத்துக்கு (தமிழ்தேசியத்துக்கு) இன்னொரு முக்கியமான தேவை இருக்கிறது. இன்று இந்திய தேசிய முகமூடியில் திரண்டுவரும் ஒற்றைத் தன்மை கொண்ட மக்கள் விரோத இந்துத்துவ பயங்கரவாதத்தையும் அதனை முன் வைத்து வேர்பிடிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் எதிர்கொள்ள மொழிவழி தேசியவாதம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

5. சாதிப்பிரிவுகள், சுரண்டல், வர்க்க, பாலடிப்படையிலான சுரண்டகளை தன்னுடைய தேசியத்துக்குள் எதிர்கொள்ள வேண்டிய தேவையும், அதை ஒழிக்க வேண்டிய தேவையும் எல்லா மொழிவழி தேசியங்களுக்கும் உள்ளது; ஒவ்வொன்றும் தமக்கே உரிய வழிகளில் அத்தகைய செயல்பாடுகளில் இறங்கிக்கொண்டே உள்ளன.

6. இன்னும் ஒரு பார்வையில் தமிழ் தேசியம் என்ற பார்வையை தலித் விடுதலைக்கும், பெண்விடுதலைக்கும் கூட அகலப்படுத்துவதற்கு ஏதுவான கூறுகளையும், வளங்களையும் மொழி என்ற அளவிலும் அரசியல் என்ற அளவிலும் தமிழ் தன்னுள் கொண்டே இருக்கிறது. தமிழை வேராகக் கொண்ட கலக முயற்சிகள் பழங்காலந்தொட்டே தமிழில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் வலுப்படுத்தப்படவேண்டும்.

7. பெரியாரின் தேசியம் பற்றிய கருத்துக்களைக் குறிப்பிட்ட நீங்கள் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற அவரது கருத்தையும் இணையாக கொண்டு வந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் இரண்டும் எதிரெதிரானவை அல்ல.

8. சுருக்கமாகச் சொன்னால் தனிஅரசாக செயல்பட வேண்டிய தேவை இல்லாவிட்டாலும், தமிழ்தேசியத்துக்கு தற்போது அனேக வேறு தேவைகள் இருக்கின்றன.
நன்றி!

Saturday, March 24, 2007

இழிபிறவி தொடர்பாக ரவி, குழலி பதிவுகளில்

இதே இழையில் எழுதப்பட்ட ரவியின் பதிவில் இடப்பட்டப் பின்னூட்டம். பொருத்தப்படு கருதி இங்கும் இடப்படுகிறது.
ரவி:
இழிபிறவியை யார் யார் இணையத்தில் பயன்படுத்துகிறார்கள் என்ற கணக்கு என்னிடம் இல்லை. டோண்டு பயன்படுத்தியதை அவர் சொன்னபின் தான் அறிந்தேன். ஆனால் பிறப்பை முன்வைத்து மனிதனைப் உயர்த்துவதும், தாழ்த்துவதும் பார்பனீயக் கருத்துருவாக்கம் என்பது என் புரிதல். இதில் நீங்கள் எவ்வளவு தூரம் உடன்படுகிறீர்கள் என்பது என்னுடைய பிரச்சனை இல்லை. ஆனால் சண்டாளனும், பறையனும் உண்டானது பிறப்பினால் தான்; அவர்களது பிறப்பினாலேயே அவர்கள் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 'இழிபிறவி' இணையத்தில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது, நடைமுறையில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய்வதல்ல என்னுடைய பின்னூட்டம்.யாரும் வசைச்சொற்களைப் பொருளுணர்ந்து திட்டுவதில்லை; தேவடியா மகன் என்று திட்டுவோர் ஒருவனது தாயை யோசித்து இந்த வார்த்தையைத் திட்டுவதில்லை; அதே நேரம் அந்தச் சொல் உருவான சிந்தனைத்தளம் ஆணாதிக்க மனநிலையில் தான் என்று புரிந்துகொள்கிறேன். அதே போல fuck you போன்ற வசைகள் அதே அர்த்தத்தை உணர்ந்து சொல்லப்படுவதில்லை; ஆனால் உடலை, கலவியின்பத்தை இழிவாகவும், கண்டனத்து உரியதாகவும் நினைக்கும் மதவழிப்பட்ட சிந்தனைத் தளத்தில் இருந்து பிறந்ததாகப் புரிந்துகொள்கிறேன். அப்படியே இழிபிறவி என்ற சொல்லைப் பலரும் பல அர்த்தங்களில் பயன்படுத்தி இருக்கலாம். நான் சொல்ல வந்தது அது எந்த சிந்தனைத் தளத்தில் இருந்து உருவானது என்பதைத் தான்.
இந்தச் சிந்தனைத்தளம் தமிழ்ச் சிந்தனை உலகில் அறிமுகமான போதோ, அல்லது வலுப்பெற்ற போதோ இது கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. அது திராவிடக் கருத்தாக்கத்தில் தொடங்கியது அல்ல; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று 2000 வருடத்துக்கு முன் எழுதப்பட்டது இந்த எதிர்ப்பின் குரலால் தான் என்பது என் புரிதல் அல்லது என் இரசவாதம். குடிமை என்ற அதிகாரத்தில் மேலோர் அல்லது நற்குடி என்பதற்கு வள்ளுவர் உயர்குணங்களை மட்டும் திரும்பத்திரும்ப வலியுறுத்துவதை வெறும் உபதேசமாக மட்டும் என்னால் பார்க்கமுடியவில்லை; அது பார்பனீயக் கருத்தாக்கத்துக்கு எதிராக அந்நாளில் வலுப்பெற்ற வேதமறுப்புத் தத்துவங்களின் அடிப்படையில் எழுந்த குரல் என்ற கட்சியை நானும் ஒத்துக்கொள்கிறேன்.
மற்றபடி எது பொலிட்டிகலி கரெக்ட் என்பதைப்பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை ஏனெனில் அவரவர்க்குத் தேவையானதை அவரவர் கண்டடைகிறார்கள் என்று நினைக்கிறேன்.

சுகுணா திவாகரின் பதிவில்

ஈழப்போரட்டமும் இந்திய அரசியலும்- 2 என்ற சுகுணா திவாகரின் பதிவில் இட்ட பின்னூட்டம்
http://sugunadiwakar.blogspot.com/2007/03/2.html

கருணாநிதி, ஜெயலலிதா பற்றிய உங்கள் பதிவோடு பெருமளவில் ஒத்துபோகும் போது நீங்கள் குறிப்பிட்ட மாவீரர்கள் பற்றிய வர்ணனையோடு பல இடங்களில் முரண்படுகிறேன். அருணாசலம் கள்ளர்சாதி வெறியர் என்று எழுந்தமானத்துக்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள் (அவர் கள்ளர் ஜாதியில்லை என்று நினைக்கிறேன்). ஆரம்பகால 90களில் அவர் முழுமையாக செயல்பட்டபோது உலகத் தமிழர் பேரவை என்ற குடையில் கீழ், தாய் மொழி வழிக்கல்வியையும், ஈழப்பிரச்சனையையும் முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் (அவைகள் எந்த நோக்கங்களைக் கொண்டிருந்த போதும்) அனைத்தையும் ஒன்று திரட்டுவதில் அவர் கணிசமான வெற்றியைப்பெற்றிருந்தார். அப்படியான ஒரு ஒற்றுமையை சாதிக்க தமிழ்சூழலில் (தமிழர்களிடம்) எவ்வளவு உழைக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழ்வழிக்கல்வியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்க உலகத் தமிழர் பேரவை எடுத்த முயற்சிகள் (100 தமிழறிஞர்களின் சாகும் வரை உண்ணாவிரத போர்) தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருக்கும் போது, எப்படி கருணாநிதியால் கலைக்கப்பட்டன; ஏமாற்றப்பட்டன என்பதை அப்போது அவ்விதயங்களைக் கவனித்து, பங்கேற்று வந்தவர்கள் அறிவர்.

அதேபோல ஈழத்தமிழர் பிரச்சனைகளில் இராஜீவ் கொலைக்குப்பின்னான கடுமையான காலகட்டங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பேரில் நியாயமான போராட்டங்களை கோரி போராடுவது இந்தியச்சூழலில் எவ்வளவு கடுமையானது என்பதும் உணரமுடியாதது அல்ல. அச்சமயத்தில் அவர் தீவிர பங்காற்றிவந்தார். அரசு அடக்குமுறைகளின் தீவிரத்தன்மையை நீங்கள் அறியாதவரா அல்லது அப்படி தோற்றமளிக்கிறீர்களா என்று தெரியவில்லை. நெடுமாறன் இதய அறுவைச்சிகிச்சைக்கு பின் பொடாவில் கைது செய்யப்பட்டு வேண்டுமென்றே கடலுக்குக்கும் சென்னைக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்லப்படவேண்டுமென்பதற்காகவே அலைக்கழிக்கப்பட்டார். நீங்கள் குறிப்பிடும் நந்தன் பத்திரிக்கை சுஜாதாவின் வசவுகளையும் சாபங்களையும் வாங்கிக்கொண்டதுடன், தமிழ் இயக்கங்களை ஒன்றிணைப்பதில், பெருவாரியாரியான தமிழ்ப்பற்றாளர்களைச் சென்று சேர்வதில் கணிசமான வெற்றி பெற்றிருந்தது. அதன் முதலாம் ஆண்டுவிழா (இன்று துக்ளக்கிற்கு பெருமைப் படுகிறார்களே) காமராஜர் அரங்கம் நிரம்பிவழிய நடந்தது. இன்றுவெகுஜன பத்திரிக்கைகள் (ஆவி, குமுதம்) போன்றவைகள் நடிகைகள், பரிசுகள், இலவசங்கள் போன்றவற்றை வைத்து சேர்க்கப்பட்ட கூட்டம் போல அல்லாமல் பத்திரிக்கையின் வாசகர்களால் அவ்வரங்கு நிறைந்தது.
மருத்துவக் காரணங்கள், பெரும் பொருளிழப்பு போன்றவைகளால் முடக்கப்படும்போது பொடாவின் அழுத்தத்தை உங்களைப்போன்றவர்களால் வேண்டுமானால் எளிதாக தாங்கிக்கொள்ள முடியுமாயிருக்கலாம். அதை அவர் நந்தனை நிறுத்தி தவிர்த்துக்கொண்டார்.

கவனமாகவும், முழுமையான புரிதலுக்கும் பரிசீலனைக்கும் ஆட்படுத்தி (ஆட்பட்டு) எழுதுதல் நீண்டகால நோக்கிலும், நம்பிக்கையை உண்டாக்குவதிலும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
நன்றி.
http://www2.blogger.com/delete-comment.g?blogID=26087005&postID=3681100734946030063

http://sugunadiwakar.blogspot.com/2007/03/2.html

Thursday, August 10, 2006

பெரியார் பட சர்ச்சை - II - பாலாவின் பதிவில்

பெரியார் பட சர்ச்சை - II - பாலாவின் பதிவில்

தந்தைப் பெரியார் தமிழக மக்களின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டார். அவரது வாழ்கை வரலாற்றை மக்களுக்கு பல ஊடகவழிகளிலும் பதிவு செய்வது, தெரிவிப்பது என்பது தமிழகத்தின் வரலாற்றையையும், ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தையும் பதிவு செய்வது என்பது ஆகும். இதைத் தமிழக அரசு எப்போதோ செய்திருக்கவேண்டும். இதில் திமுக, அதிமுக, திக போன்ற கட்சிகள் எங்கு வருகின்றன? அப்படி பெரியாரை கட்சிகளுடன் இணைப்பதன் மூலம் அவரை ஒரு கட்சி சார்ந்தவராக சித்தரிப்பது என்பது வேண்டுமானால் நிறைவேறலாம். அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கிய பெண்களை எந்தக் கட்சியின் மகளிர் அணியினர் என்று சொல்லுவீர்கள்? இந்த ஓட்டுக்கட்சிகள் பெரியாரின் கொள்கைகளில் சிலவற்றை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டால் அதற்காக அவர்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கலாம், தங்கள் அலுவலக வளாகத்தில் சிலை வைத்துக்கொள்ளலாம்; விரும்பினால் தனியாக திரைப்படம் எடுக்கலாம். இப்படியான ஒரு முயற்சிக்கு தமிழக அரசு தான் நினைக்கிற, சட்டத்துக்கு உட்பட்ட எந்த வழியிலும் உதவிசெய்யலாம். இப்படியே உவேசாவின் நூல்களை நாட்டுடமை ஆக்கியது, காந்தி பற்றிய படத்துக்கு இந்திய அரசு உதவிகள் செய்வது போன்றவை அடங்கும். இதில் சர்ச்சைக்கு இடத்தைக்கண்டு பிடிப்பது என்பது எஸ்.வி. சேகரின் மனநிலையைக் காட்டுவதாகத் தான் தோன்றுகிறதே அன்றி வேறெதையும் அல்ல.

இராஜாஜியைப் பற்றி மட்டுமல்ல, திருப்பூர் குமரன், வ உ சி, ஜீவா, காமராஜர், போன்றவர்களைப் பற்றியும் படமெடுக்கலாம்; அரசு அப்போதைய நிதி நிலைமையைப் பொருத்து உதவியும் செய்யலாம். இப்படி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டு பிரச்சனை செய்வதற்குப் பதிலாக வைக்கத்தில் ஆலயப் பிரவேச போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்ட போது நம்பூதிகள், அவர் செத்தொழிய சத்ரு சம்கார யாகம் வளர்த்தனர்; அது போன்ற உத்தமமான முயற்சிகளில் எஸ்.வி.சேகரும் ஈடுபட்டுப் படத்தை நிறுத்த அல்லது ராஜசேகரன் செத்தொழிய முயற்சி செய்து பார்க்கலாம்; அல்லது அதற்கும் யாராவது மாஜிக் ராமசாமி என்ற பெயர்களில் அதற்கான இடங்களில் முயற்சி செய்கிறார்களோ என்னவோ?

Friday, July 21, 2006

தமிழ்சசியின் பதிவில் ஜெயஸ்ரீயை முன்வைத்து

Jsri://மதமும் அரசியலும் கலக்கக்கூடாது என்பது முக்கியமானது. அந்தக் கருத்தை யாருமே கண்டுகொள்வதில்லை //இந்து மதம் என்று வலிந்த உருவாக்கப்படுகிற நிறுவனமே ஒரு பெரும் அரசியல் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் பாட்டியை அல்லது அவரது அம்மாவை நீங்கள் என்ன மதம் என்று கேட்டிருந்தால் அவர் அன்று என்ன பதில் சொல்லி இருப்பார், இன்று நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள்? இதில் ஒரு பெரும் அரசியல் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா? இப்படி மதம் மாற்றும் அரசியலை நீங்கள் ஏன் ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லது ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று கேட்டால் அது மேம்போக்கான கேள்வியா? இப்படியான மதமாற்றும் அரசியலைத் தான் அமெரிக்கா பால் பவுடரும், டாலரும் கொடுத்து செய்கிறது; இஸ்லாம் இப்போது காசுகொடுத்து செய்கிறது என்று சொன்னால் இந்து மதம் எதையுமே கொடுக்காமல் இருப்பவற்றையும் பிடுங்கிக் கொண்டு, இழிவும் செய்து, விருப்பத்தைக்கூட கேட்காமல் மாற்றுகிறது என்று பார்க்கச் சொன்னால் அது மேம்போக்கான கேள்வியா?அது மேம்போக்கான கேள்விதான் என்று சாதித்தால் (ஒருவர் (நீங்கள் அல்ல) புரிந்துகொண்டபின்னும் அப்படியே சாதிப்பதாய் நான் நினைத்தால், அவரது தேவை வேறு என்று நான் முடிவுக்கு வருவது தவறானதா?)சிலர் இந்து மதம் என்ற நவீன அரசியல் வடிவம் முக்கியமானது என்று நம்புகிறார்கள்; அவர்களில் சிலர் அதனால் பயன் அடைகிறார்கள், எப்படி தமிழால் சிலர் பயனடைகிறார்களோ அப்படி. உங்களைப் போன்ற பலர் அவர்கள் பயன் பெற உழைக்கிறீர்கள் எப்படி அந்த அரசியல்வாதிக்காக ஒரு அப்பாவி உழைக்கிறானோ அப்படி. எனக்கு இந்து மதம் என்ற அரசியல் வடிவம் ஆன்மீகத்தன்மை கொண்டதல்ல. இராமகிருஷ்ண பரமஹம்சர் இந்து மதவாதி அல்ல (என்னளவில்). அவரிடமே சீடராய்ச் சேர்ந்தவர்களிடம் கூட அவரவர்க்கு தேவையான, அவரவர்க்கு இயல்பான சில முறைகளைத் தான் அவர் உபதேசித்தார்; ஏனெனில் அவருக்கே சில முறைகள் உவப்பானதாக (அவர் உண்மையான வழிகள் என்று கண்டுகொண்டவை கூட) இல்லை. அவரிடமிருந்து ஒரு இந்துவை நீங்கள் எடுக்கமுடியாது. காலங்காலமாக பாமரமக்களுக்கு அவர்கள்தான் முக்கியமான ஆன்மீக வழிகாட்டிகள். அவர்களை பாமர மக்கள், ஆன்மீக தேட்டம் கொண்டோர் எந்த மதம் என்றெல்லாம் பார்க்காமல் பார்த்து, வழிபட்டு தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டார்கள். இன்று இந்து என்ற பீடங்களை உருவாக்கி அதில் தங்களை நிறுத்திக்கொள்பவர்கள் அன்றும் இருந்தார்கள் வழக்கம் போல மக்களைவிட்டு விலகி அரசியல் சக்திகளாக. அந்த அரசியல் சக்திகள் இன்று தங்களை மேலும் பெரிய அரசியல் சக்திகளாக்கிக்கொள்ள பாமர மக்களை இந்து என்று ஒரு நிறுவனத்துக்குள் அவர்களைக் கூட கேட்காமல், பிரதிபலனாய் எதுவும் தராமல், அடிமைப்படுத்தி சுரண்டிக்கொண்டு இழுத்துக்கொள்கிறார்கள்; அடையாளப்படுத்துகிறார்கள்; அவர்களது குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார்கள். இந்த இந்துமதம் அழியவேண்டும் என்று நான் சொல்லுவதில் இதுவும் ஒரு காரணம். இன்னும் பல காரணங்கள் இருகின்றன. மெல்ல பேசுவோம்.சில முடிச்சுகள்://அதைப் பிற பெண்கள்கூட ஆதரிப்பதும் எனக்குப் புரிவதில்லை. //இது எனக்குப்புரியவில்லை! பெண்கள் என்ற வகையில் அவர்கள் ஆதரிக்காத கருத்து எதாவது இருக்கிறதா?(வரதட்சணை கொடுக்காத பெண்ணைக் கொளுத்தலாம் என்ற கருத்தைக்கூட ஆதரிக்கிற பெண்கள் இருப்பதை நாம் அறியாமலா இருக்கிறோம்? :))//சாத்தியமே இல்லை என்று எனக்குத் தெரியும்//சாத்தியமாகி இருக்கிறது என்பது என் அனுபவம். நீங்கள் கூட அப்படியொரு சாத்தியத்தின் மேல் நீங்களே அறியாமல் கொண்ட நம்பிக்கையில் தான் இங்கு இப்போது படிக்கிறீர்கள்; பதில் எழுதுகிறீர்கள்.ஒரு கேள்வி://பெயரையும் ஊரையும் வைத்துத்தான் இன்று நோக்கங்கள் உள்நோக்கங்களாகத் திரிக்கப்படுகின்றன.//இதை அடையாளப்படுத்தி ஒருவரை முத்திரை குத்தி அவரது நோக்கங்களாக சிலவற்றைச் சொல்லுவது என்று புரிந்துகொள்கிறேன்.நாம் அடையாளப்படுத்துகிறோமா? அல்லது ஒவ்வொருவரும் ஒரு அடையாளம்தான் நான் (அந்த நபர்) என்று நம்பி அதைக் காப்பாற்ற, விளம்பரப்படுத்த, பரப்ப, மற்றவரை அந்த அடையாளம் சிறந்தது என்று நம்பவைக்க உழைக்கிறார்களா? இது அரசியல் மட்டுமல்ல ஆன்மீகக் கேள்வியும் கூட. இதில் இருந்து ஒருவர் விரும்பினால் நிறைய பதில்களைப் பெறலாம் என்று நினைக்கிறேன்.

http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_09.html#114196915503576169

Sunday, July 02, 2006

ஆறு வலைப்பதிவாளர்கள்- பதிவில்

முத்து, இந்து மதத்தை அழிக்காமல் ஜாதியை ஒழிப்பது முடியாது என்ற பதிவு உண்மையில் என்னுடைய கருத்தைப் பேசியது என்பதை விட அது அம்பேத்காரின் அந்தத் தலைப்பினால் ஆன புத்தகத்தைப்பற்றியது. அவரது அந்து கருத்துக்கு ஏற்ப அவரும் அவரது ஆதரவாளர்களும், இன்னும் இலட்சக்கணக்கானவர்களும் மதம் மாறினர்கள்; மதம் மாறி வருகிறார்கள். அந்தக்கேள்வி இந்த நிமிடம் வரை உயிர்ப்போடு இந்து-பார்பனிய அடிப்படைவாதத்தை எதிர்கொண்டுவருகிறது. ஆனால் அந்தப்பதிவுக்கு முகம் கொடுத்த இந்துமத ஆதரவாளர்கள் எவரும் (ஆம் எவரும்) அந்தக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. பெரியாரை தாக்குவது, தங்கமணியின் இந்துமத அறிவை கேள்வி கேட்பது, பொய்யான கூச்சல்களை எழுப்பியது, சொந்த அனுபவங்களை வைத்து சமூக பிரச்சனையை அளப்பது என்பதாகவே அவர்களது கேள்விகள் இருந்தன. இந்தக்கேள்விகளை சிலர் நேர்மையுடனும் எழுப்பியிருக்கலாம்; ஆனால் அது அல்ல அம்பேத்கார் அந்தப்புத்தகத்தை எழுதியதன் நோக்கம். அது அல்ல என் பதிவின் நோக்கமும்.

மோடிவழியிலான (குஜராத்) அணுகுமுறையின் மூலம் இன்னும் சிறிது காலத்துக்கு தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முனைப்புகளை ஒத்த அணுகுமுறைதான் பொதுவாக பதிவுகளில் வெளிப்பட்டது; இன்றும் வெளிப்படுகிறது. இந்து-தேசியவாத்தைத் (அதாவது பிராமணிய மேலாண்மையைக் காப்பாற்றக்கூடிய) தூக்கிப்பிடிப்பது, பிறமதங்கள், சமூக/அரசியல் இயக்கங்கள் மேல் வெறுப்பை வளர்ப்பதன் மூலம் பாமர ஒடுக்கப்பட்ட மக்களை தங்களது பகடைக்காய்களாகவும், ஏவல் நாய்களாகவும் பயன்படுத்திகொள்ளும் பாசிச நடவடிக்கை மூலம் அந்தமக்களுக்கு இருக்கும் வெளியேறிச்செல்லும் வாய்பை மறுப்பது/ அந்த மக்களுக்கு உதவும் அரசியல்-சமூக சக்திகளை அவர்களைக்கொண்டே அழிப்பது என்ற ஹிட்லர்-மோடி தத்துவ பிரச்சாரங்களே வலுப்பெறுகின்றன.

அம்பேத்காரின் அந்தகேள்வி அணுகப்படாமலே இருக்கிறது. ஆனால் அது கேட்கப்பட வேண்டியவர்களால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

(http://muthuvintamil.blogspot.com/2006/06/blog-post_115158139135807692.html#115178482589649191)

Monday, April 10, 2006

காசியின் பதிவில்

காசியின் பதிவில் (வானொலியில் வலைப்பதிவுகள் ) எழுதிய பின்னூட்டம் http://kasimedia.blogspot.com/2006/04/blog-post_10.html

மகிழ்ச்சியான விதயம் காசி. நன்றி..
//நான் நினைத்தபடியல்லாமல், 'தமிழ்மணம்' என்ற சொல்லைச் சுற்றி அதிகநேரம் பேசவேண்டியிருந்தது, என்னை தமிழ்மணம் காசி என்று சொல்லிக்கொண்டதாலோ என்னவோ. திரு. சேயோன், என் தொழில்நிறுவனத்தின் இஅய்க்குநர் என்ற ரீதியில் அறிமுகம் செய்யவிருந்தார், அதற்கும் உரையாடலின் பொருளுக்கும் தொடர்பில்லாததால், நான் 'தமிழ்மணம்' காசி என்று சொல்லிக்கோண்டேன். அவ்வளவுதான். இனி அடுத்து வரும் வாரங்களில் பொதுவான விடயங்களை சொல்லமுடியும் என்று நம்புகிறேன். //
தமிழ்மணத்தை இணையத்தமிழைப் பற்றி பேசும் போதும், குறிப்பாக வலைப்பதிவுகளைப்பற்றி பேசும் போதும் குறிப்பிடுவது ஒரு பாவச்செயல் அல்லவே. இன்றைக்கு நூற்றுக்கணக்கான பலதுறைகளைச் சேர்ந்த, பலநாட்டில் வதியும் தமிழார்வம் கொண்டவர்கள் முனைந்து எழுதுவதற்கு தமிழ்மணம் ஒரு களமாக, வாசலாக, ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இணையத்தமிழ் என்ற வகையில் (மற்ற ஊடகத் தமிழ் போன்று) சில நிறுவனங்களின் பிடியில், வார்ப்பில் தமிழர்களின் கருத்து, விருப்பம், கலை, இலக்கியம் என்பது இதுதான் என்று கிடந்த தமிழ் இன்று வலைப்பதிவு வழங்குகிற வசதியால் நிறுவனங்களின் கட்டமைப்புகளை உடைத்து வெளியேறியபோது அது சிதறிவிடாமலும், தேங்கி அழிந்துவிடாமலும் கட்டற்று நடப்பதற்கு தமிழ்மணம் ஒரு முக்கியமான காரணம். வலைப்பதிவுகளின் பங்கையும், தமிழ்மணத்தின் பங்கையும் குறிப்பிடுவது இணையத்தமிழைப்பற்றிய சரியான பதிவுகளில் செய்யப்படவேண்டியது. உங்களது தயக்கத்தை புரிந்துகொள்ள முடிந்தாலும் அப்படியான துரதிர்ஷ்டம் தமிழுக்கு வாய்ப்பது புதிதான ஒன்றல்ல என்பதும் புரிகிறது.